மந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

மந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
Updated on
1 min read

மதுரை: புதிய உறுப்பினர் சேர்க்கை மந்தமாக நடப்பதாக தகவல் வெளியானதால் நிர்வாகிகளை அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக தலைமை புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கைளை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் ஜூன் 3-க்குள் புதிய உறுப்பினர்கள் பட்டியலை ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஏப்.4-ம் தேதி தொடங்கியது. 10 சட்டப்பேரவை தொகுதிளில் ஒரு தொகுதிக்கு தலா 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்களான அமைச்சர் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் கட்டுப்பாட்டில் தலா 3 சட்டப்பேரவை தொகுதிகள், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி கட்டுப்பாட்டில் 4 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒன்றியம், பகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டு, கிராமத்துக்கும், ஒன்றியத்துக்கும் எவ்வளவு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட வேண் டும். 15 நாட்களாகியும் இதுவரை 1 லட்சத்தை தாண்டவில்லையாம்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: ‘உறுப்பினர் சேர்க்கையில் சில நிர்வாகிகள் இன்னும் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இது போன்றவர்களுக்கு மாற்றாக வேறு அணி நிர்வாகிகள் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. நூறு நாள் வேலையில் ஈடுபட்டுள்ளோர், மகளிர் சுய உதவிக் குழுவினர் என அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்தோர் பலரும் புதிய உறுப்பினராகச் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் விரைவில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதில் பயனாளியாக வேண்டும் என பல பெண்கள் ஆர்வத் துடன் உள்ளனர். இவர்களும் திமுகவில் உறுப்பினராகச் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இளம் வாக்காளர்கள், பட்டதாரி பெண்கள் என பலரும் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.

தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகளை தினசரி கண்காணிக்கின்றனர். மந்தமாக நடக்கும் இடங்களைக் கண்டறிந்து அப்பகுதி நிர்வாகிகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து தற்போது அதிகளவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சித் தலைமை நிர்ணயித்த இலக்கை தாண்டி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து சாதிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in