வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவை நோக்கி புறப்படத் தயாராகும் மீனவர்கள்

வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவை நோக்கி புறப்படத் தயாராகும் மீனவர்கள்
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சத்தீவில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும ஜூலை 26ம் தேதி படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி கச்சத்தீவில் தஞ்சமடைவது என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்ககூட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் 150-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 46 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 2 ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகு இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் இன்று மீனவர்கள் சங்க பிரநிதிதிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மீனவப் பிரதிநிதி போஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர் பிரநிதிகள் தேவதாஸ், சேசு, எமரிட் உள்ளிட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தற்போது அனுராதபுரம் சிறையில் உள்ள 37 தமிழக மீனவர்களையும், இதுவரை விடுவிக்கப்படாத 46 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; பொய் வழக்கு போடப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொழும்பு சிறையில் உள்ள 5 தங்கச்சிமடம் மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; கச்சத்தீவுப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து என்னிடம் பேசிய மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ், "இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதிகளில் உள்ள பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 21 அன்று 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது படகுகளின் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது மற்றும் இம்மாதம் 26ம் அன்று விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி அனைத்து படகுகளுடன் கச்சத்தீவு சென்று தஞ்சம் அடைவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in