Published : 09 Sep 2017 03:18 PM
Last Updated : 09 Sep 2017 03:18 PM

வரும் 13-ம் தேதி நடைபெறும் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்: ஸ்டாலின்

சமூக நீதியை வென்றெடுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 13-ம் தேதி நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டங்களில் திமுக தொண்டர்களும், அனைத்து கட்சியினருடன் திரளாக பங்கேற்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகின்ற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக மாவட்ட தலைநகரங்களில் நடத்திட அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, இதற்கான தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைதியான வழியில் அறப் போராட்டம் நடத்துவது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை மனதில் வைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட கழக செயலாளர்கள், அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு முன் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டு, முறைப்படி அனுமதி பெற்று அமைதி வழியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும்.

திமுக எப்போதும் போல் சட்டத்தின் ஆட்சியை மதித்து, ஜனநாயகரீதியில் நடைபோடும் இயக்கம். ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அறவழியில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையையும், சமூக நீதியையும், மாநில உரிமையையும் வென்றெடுக்க, திமுக நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும், அனைத்துக் கட்சியினருடன் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x