கும்பகோணம் | தரக்குறைவாக பேசுவதையும், அலைக்கழிப்பதையும் தவிர்க்க மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்
மாற்றுத் திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: மாற்றுத் திறனாளி அலுவலகத்திலுள்ள பெண் அலுவலர் மிகவும் தரக்குறைவாக பேசுவதையும், அலைக்கழிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் என். சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் வி.பிரேமாவதி, ரவி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூறியது: "மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு கால் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும், அரசு நிதியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் 5 சதவீதமும், அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை நிகழாண்டிற்குள் நிரப்ப வேண்டும்.

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வித் தொகையை 2 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து பொதுத் தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்குக் கால வரன்முறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

அப்போது, நிலுவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து, மாற்றுத் திறனாளி நல அலுவலரிடம் கேட்டனர். அதற்கு கோட்டாட்சியர் , நாளை தஞ்சாவூருக்கு வாருங்கள் என்றார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்களை அலைக்கழிக்காதீர்கள் என்று அவர்கள் கூறியபோது, தஞ்சாவூருக்கு வரமுடியாது என்றால் உதவித் தொகை வழங்க முடியாது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்ததும், கோட்டாட்சியர் சமாதானம் செய்து வைத்தார். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலகத்திலுள்ள பெண் அலுவலர் மிகவும் தரக்குறைவாக பேசுவதையும், அலைக்கழிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனப் புகாரளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in