Published : 21 Apr 2023 04:37 AM
Last Updated : 21 Apr 2023 04:37 AM
சென்னை: அதிமுக-வில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்துவந்த அதிகார மோதலில் முக்கியக் கட்டமான சின்னம் பெறுவதில் இபிஎஸ் தரப்புக்கு இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. அதிமுக-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதையும், கட்சியில் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவது, தற்போதைய சூழ்நிலையில் அதிமுக-வின் கவுரவப் பிரச்சினையாக உள்ளது. அதிகார மோதல் இருந்துவந்த நிலையிலும்,பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருதரப்பும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதில் இரட்டை இலை சின்னம் பெறுவதில் இரு தரப்புக்கும் போட்டி இருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இபிஎஸ் தரப்பை அங்கீகரித்து நேற்று வழங்கியுள்ள கடிதம், அதிமுகவின் அதிகாரப் போட்டியில் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது.
அதேநேரத்தில், நீதிமன்ற வழக்குகளில் எதிர்காலத்தில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளுக்கு இந்த உத்தரவு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் கடிதம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், எதிர்காலத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் மாறினால், அதற்கேற்ப முடிவுகளை மாற்றி உத்தரவிட வேண்டியது வரும் என்பதை தேர்தல் ஆணையம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.
இபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பழகன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்தி நகர் ஆகிய 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் அதிகாரப்பூர்வ சின்னம் பெறுவதற்கு, ‘ஏபி' படிவத்தை நிரப்பி, அதிகாரப்பூர்வ கட்சி நிர்வாகி கையெழுத்திட்டு வழங்க வேண்டும். தற்போது இபிஎஸ் தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதன் மூலம், அவர் கையெழுத்திட்டு வழங்கும்படிவத்தை மட்டுமே தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்வார். ஓபிஎஸ் தரப்பில் போட்டியிடுபவர்கள் சுயேச்சை சின்னத்தை மட்டுமே பெற முடியும்.
இபிஎஸ் தரப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையிலும், ஓபிஎஸ் தரப்பு வரும் 24-ம் தேதி திருச்சியிலும் மாநில அளவில் மாநாடு நடத்தி தங்களது செல்வாக்கை நிரூபிக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இபிஎஸ் தரப்புக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
கட்சியின் பெரும்பகுதி இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு செல்வாக்கு இருப்பது போன்ற பேச்சு உள்ளது. இதை முறியடிக்கவே தென் மாவட்டத்தின் முக்கிய நகரான மதுரையில் மாநாடு நடத்தி, தனது செல்வாக்கை நிரூபிக்க இபிஎஸ் திட்டமிட்டு வருகிறார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என சாதகமான உத்தரவுகள் வந்தவண்ணம் இருப்பதால், இபிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் 90 சதவீதம் அதிமுக வந்துவிட்டது. இருந்தாலும், ஓபிஎஸ் தொடர்ந்துள்ள சில வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும்வரை, கட்சியின் தலைமைப் பதவியை அனுபவிப்பதில் சிறு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எதிர்தரப்பில் இருந்து வரும் வியூகங்களை முறியடித்து, விசாரணையில் உள்ள வழக்குகளிலும் இபிஎஸ் தரப்பு வெற்றிகண்டு, சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுவிட்டால் கட்சியை 100 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிமுக-வின் தனிப்பெரும் தலைவராக இபிஎஸ் உருவெடுப்பார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘ஏபி படிவம்’: ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘ஏ’ படிவம் மற்றும் ‘பி’ படிவம் மிகவும் முக்கியமானதாகும். ‘ஏ’ படிவத்தில் ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவர் யார் என்பதைக் குறிப்பிட்டு, அக்கட்சியின் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படித் தெரிவிக்கும் அதிகாரம் படைத்தவர் யார் என்பதை ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து, அதை தாக்கல் செய்ய வேண்டும். இதில் வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவரின் கையெழுத்து மற்றும் கட்சியின் ‘சீல்’ இருக்க வேண்டும்.
‘பி’ படிவத்தில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார், அவருக்கு மாற்று வேட்பாளர் யார் என்பதைக் குறிப்பிட்டு, கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளருக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் விவரங்கள் அடங்கியிருக்கும். இவை இரண்டையும் சேர்த்து ‘ஏபி’ படிவம் என்று குறிப்பிடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT