

கோத்தகிரி: கோத்தகிரி மேடநாடு காப்புக் காட்டில் அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக, சுற்றுலா துறை அமைச்சரின் மருமகன் மீது வனத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த மேடநாடு காப்புக் காட்டில் உள்ள 230 ஏக்கர் எஸ்டேட்டுக்கு செல்ல சாலை சீரமைப்பு பணி அனுமதியின்றி நடந்துள்ளது. இந்த எஸ்டேட்டின் உரிமையாளர், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார் ஆவார். அங்கு 1.6 கி.மீ.க்கு அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின்பேரில், கடந்த 13-ம் தேதி பணிகளை வனத்துறையினர் நிறுத்தினர்.
அங்கு பணிக்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் பெறாத ‘பொக்லைன்’ மற்றும் ‘ரோடு ரோலர்’ இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியை மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் பாலகிருஷ்ணன், ஓட்டுநர்கள் பரூக், பங்கஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், எஸ்டேட் உரிமையாளர் சிவகுமாருக்கு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. வனத்தில் சாலை அமைத்த விவகாரத்தில் தனக்கு ஏதும் தெரியாது என்று சிவகுமார் வனத்துறை விசாரணையில் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, "கோத்தகிரி மேடநாடு பகுதியில் பட்டா நிலத்தை சமன்படுத்துவதாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆய்வு செய்து, வருவாய் துறையினர் 20 நாட்களுக்கு அனுமதி அளித்தனர். ஆனால், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் பணி செய்யாமல், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதாக வனத்துறை அளித்த தகவலின்படி, அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இடத்தின் உரிமையாளர் குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதன்பேரில் உரிமையாளர் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில, சிவகுமார் இந்த வழக்கு தொடர்பாக கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு கோத்தகிரி நீதித்துறை நடுவர் வனிதா ஜாமீன் வழங்கினார்.