Published : 21 Apr 2023 07:03 AM
Last Updated : 21 Apr 2023 07:03 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள சிராஜூதீன் நகரில் ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்த தரைப்பாலம் மிகவும் பழுதடைந்ததால், ரூ.2.40 லட்சம் மதிப்பில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்தப்பாலம் வழியாக மணல் லாரி சென்றபோது திடீரென பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில் லாரியின் பின்பகுதி வாய்க்காலுக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பாலம் கட்டும்போதே பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் பாலம் உடைந்துள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
உடைந்து சேதமடைந்த பாலத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியது: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.25 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆதாம் வடிகாலில் ரூ.2.40 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 18 நாட்கள் ஆகின்றன. ஆனால், இந்தப் பாலம் இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி விட்டு தடையை மீறிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர் மீது புகார்: இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாலத்தை சொந்த செலவில் கட்டித் தருவதாக லாரி உரிமையாளர் எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி நாளை (இன்று) புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT