

கோவை: என்டிசி பஞ்சாலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி, பஞ்சாலைகளுக்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 7 என்டிசி பஞ்சாலைகளில் கோவையில் மட்டும் 5 பஞ்சாலைகள் உள்ளன. இயங்காமல் உள்ள என்டிசி பஞ்சாலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது. கோவையில் முருகன் மில்ஸ், சிஎஸ்டபிள்யு மில்ஸ், ஸ்ரீரங்கவிலாஸ் மில்ஸ், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ் ஆகிய 5 பஞ்சாலைகள் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ராஜாமணி கூறும்போது, “தொழிலாளர்களுக்கு கொடுத்து வந்த பாதி சம்பளம் கூட கடந்த 6 மாத காலமாக வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. இன்னும் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய பயன்கள் வழங்கப்படவில்லை.
பணிக்கு வந்து கொண்டிருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கும் எவ்வித சம்பளமும் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்பதற்காக இந்த அறப்போராட்டம் நடைபெற்றது. என்டிசி நிர்வாகமும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து என்டிசி தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளுக்கு என்டிசி நிர்வாகம் செவிசாய்க்க வில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை, அனைத்துச் சங்க கூட்டுக்குழு கூடி முடிவெடுத்து செயல்படுத்தும்” என்றார்.
இந்த போராட்டங்களில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பி.டி.மோகன்ராஜ், ஏடிபி எம்.கோபால், ராமச்சந்திரன், சிஐடியு சி.பத்மநாபன், சி.பிரான்சிஸ் சேவியர், ஐஎன்டியுசி வி.ஆர்.பாலசுந்தரம், டி.வெங்கிடுசாமி, ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எம்எல்எஃப் மு.தியாகராஜன், ஏ.பழனிச்சாமி, டாக்டர் அம்பேத்கர் சங்கத்தைச் சேர்ந்த எம்.நீலமேகம், என்டிஎல்எஃப் பி.ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.