Published : 21 Apr 2023 07:15 AM
Last Updated : 21 Apr 2023 07:15 AM
சென்னை: அதிமுகவில் ராணுவக் கட்டுப்பாடு இல்லை. இங்கு அனைவரும் சமம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: அதிமுக பொதுக்குழு கூட்டம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகுதான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள். அதிமுகவை உண்மையாக நேசிப்பவர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர விரும்புகிறவர்கள், ஒருசிலரை தவிர்த்து அனைவரையும் கட்சியில் இணைத்துக் கொள்வோம்.
தற்போது ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும், ஒரு குழு,மகளிரணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான் சாதாரண தொண்டன்: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லை. நான் சாதாரண தொண்டன்தான். கட்சிக்கு ஒருபொதுச்செயலாளர் தேவை. அனைவரும் சேர்ந்து என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களோடு பயணித்து, திமுக அரசை அகற்றி, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதுதான் எங்கள் லட்சியம். அதிமுகவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக மீண்டும் பேரவைத் தலைவரிடம் முறையிட இருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
தமிழகத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி. கர்நாடக மாநிலத்தில் ஒரு தொகுதியில் எங்கள் அடையாளத்தை காட்டுவதற்காகத்தான் போட்டியிடுகிறோம். ராணுவ கட்டுப்பாடு திமுகவில் இருக்கிறது. இங்கு இல்லை. இங்கு அனைவரும் சமம் என்றார்.
இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT