

கிருஷ்ணகிரி / சேலம்: காதல் திருமணத்துக்கு எதிரான படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக்கோரி கிருஷ்ணகிரியில் மே 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாகக் காதல் திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும், காதல் திருமணத்துக்கு எதிரான படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரியும், கிருஷ்ணகிரியில் மே 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை ஊழல் புகார் கொடுப்பார் என பார்த்தால், சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஊழலுக்கும், சொத்துக்கும் அண்ணாமலைக்கு வித்தியாசம் தெரியாதா. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அனுசுயாவுக்கு ஆறுதல்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் காதல் திருமணம் செய்த சுபாஷை அவரது தந்தை தண்டபாணி படுகொலை செய்தார். கொலையைத் தடுத்த தனது தாய் கண்ணம்மாளையும் அவர் கொலை செய்தார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தண்டபாணியின் மருமகள் அனுசுயாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று காலை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அனுசுயா குணமடைய 2 மாதங்கள் ஆகும். அவருக்கு ஏற்பட்ட கொடுமை வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க தனிச் சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.