

காஞ்சிபுரம்: இந்தியா உலக அளவில் போட்டியாக மாறுவதற்கு இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை மற்றும் இந்திய அரசின் தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்று பேசியது: ஆர்.ஜி.என்.ஒய்.ஐ.டி. நிறுவனம் கல்வி ஆராய்ச்சி மற்றும் திறன் முயற்சிகளுக்காக நாடு முழுவதும் உள்ள முதன்மை நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நிறுவனத்தை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்லும்.
பட்டதாரிகள் மத்தியில் கற்றல் என்பது வகுப்பறைகளில் தொடங்குவதும் இல்லை. முடிவதும் இல்லை. இது ஒரு வாழ்நாள் பயணம். பட்டதாரிகள் தொழில்சார் வாழ்வாதாரத்துக்காக அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிந்து கொள்ள தொடர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும்.
உலகில் எந்த நாடும் இன்று உலக அளவில் தனிமைப்படுத்தப்பட முடியாது. அதன் பொருளாதார சக்தியுடன் இந்தியா உலகளாவிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்குவது, இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார் படுத்துவது, ஏராளமான வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது ஆகியவை இந்தியா உலக அளவில் போட்டியாக மாறுவதற்கு மிக முக்கியமானது. அதற்கு இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நமது சக குடிமக்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.
தற்போது உலக அளவில் இந்தியாவின் பார்வை மாறியுள்ளது. இளைஞர்கள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பர். இளைஞர்கள் நமது நாட்டின் கடந்த கால பெருமைகளை மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நேரம் இது என்றார்.
இந்த விழாவில் ஆர்.ஜி.என்.ஐ.ஒய்.டி நிறுவனத்தின் இயக்குநர் சிப்நாத் தேஃப் வரவேற்றார். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விவகாரத் துறை இணை செயலர் ஸ்ரீ.நிதேஷ் குமார் மிஸ்ரா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 877 இளைஞர்கள் பட்டம் பெற்றனர்.