Published : 21 Apr 2023 06:29 AM
Last Updated : 21 Apr 2023 06:29 AM
சென்னை: சென்னை பாரிமுனை அருகே கட்டிடம் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. கட்டிட விபத்து தொடர்பாக உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரிமுனை அருகேயுள்ள அரண்மனைக்காரன் தெருவில், தனியாருக்குச் சொந்தமான, 60 ஆண்டுகள் பழமையான 5 மாடிக் கட்டிடம் இருந்தது. அண்மையில் அதை வாங்கிய உரிமையாளர், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அந்தக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இதில் லேசான காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இடிபாடுகளை அகற்றும்போது 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று, நவீனக் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இடிபாடுகளில் மனிதர்கள் சிக்கியிருப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் தென்படவில்லை. பின்னர், இயந்திரங்கள் மற்றும் லாரிகளைக் கொண்டு கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டன. மொத்தம் 73 லாரிகள் அளவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டன.
கட்டிடம் இடிந்த பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நால்வரையும் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு ஆகியோர் சந்தித்து, ஆறுதல் கூறினர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கட்டிட உரிமையாளர் ராஜு, மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிட சீரமைப்புப் பணியை மேற்கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், கட்டிட விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கட்டிட உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் எஸ்பிளனேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT