Published : 24 Sep 2017 06:48 AM
Last Updated : 24 Sep 2017 06:48 AM

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம்: சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு முடிவு

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும்.

மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல் தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல்பாடு ஆகியவற்றை சேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 2019-19 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர் உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது வணிகவியல் பாடத்தில் ஜிஎஸ்டி தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட துணைவேந்தர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x