அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவி: உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவி: உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மாதாந்திர ஆட்சிமன்றக் குழுக் (சிண்டிகேட்) கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிண்டிகேட் உறுப்பினர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறியதாவது: 2021-ல் சிண்டிகேட் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ளதால், பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏனெனில், எம்எல்ஏ-க்கள் மட்டுமே சிண்டிகேட் குழுவில் இடம்பெற முடியும்.

அதேபோல, ஆளுநரின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ரஞ்சனி பார்த்தசாரதி ஓய்வு பெற்றதால், மாற்று நபரை நியமிக்க ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதுதவிர, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் மாற்றப்பட்டதால், அவருக்குப் பதிலாக புதிய செயலர் சிண்டிகேட் உறுப்பினராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மேலும், தொழிற்சாலைகள் சார்பில் குழு உறுப்பினராக சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்.

இதுதவிர தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேராசிரியர்கள் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டதாகவும், உதயநிதிக்கு பதிலாக மாற்றொருவரை பரிந்துரை செய்ய அரசிடம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in