

சென்னை: பாஜகவை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், மற்ற மதங்களுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தமிழக பாஜக சிறுபான்மை அணி சார்பில் ‘இறை நோண்பு துறப்பு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுகாதர் ரெட்டி, மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், சிறுபான்மை அணி தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் மற்றும் சிறுபான்மை அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாம் வெவ்வேறு மதங்களில் பிறந்திருந்தாலும், இந்தியர் என்ற உணர்விலே இணைந்திருக்கிறோம். அனைத்து மதங்களுக்கும் வெவ்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகள் இருக்கின்றன.
ஆனால், நம்மை சகோதரத்துவம் என்ற பந்தம் ஒன்றாகப் பிணைக்கிறது. பாஜகவில் அதிக அளவில் முஸ்லிம் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளனர். குறிப்பாக, பாஜக சிறுபான்மை அணி மிகச் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவை கொண்டாடுவதற்குக் காரணம், எந்தவித வேற்றுமையும் நம்மை பிரிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
பாஜகவை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், மற்ற மதங்களுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரச்சாரத்தைக் கட்டமைக்கிறார்கள். ஈஸ்டர் தினத்தன்று டெல்லியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார். அதேநேரத்தில், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்தும் சொல்கிறார். அனைவரையும் அரவணைத்து, ஒரே பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
பாஜகவில் உள்ள முஸ்லிம் நிர்வாகிகள், மிகச் சிறப்பாக கட்சிப் பணியாற்றுகின்றனர். பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, தக்க பதிலடி கொடுக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.