Published : 21 Apr 2023 07:28 AM
Last Updated : 21 Apr 2023 07:28 AM

வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை - முதல்வரின் அறிவிப்புக்கு ராமதாஸ், கி.வீரமணி வரவேற்பு

சென்னை: சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமதாஸ்: மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்கு, சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அதற்காக அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடுஇணையற்றவை. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கியவர். அவரது வாழ்க்கை வரலாறும் தமிழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

கி.வீரமணி: தமிழகத்தை தனது தாயகமாகவே மதித்தவர் வி.பி.சிங். சமூகநீதிக்காகவே 10 மாதங்களில் பிரதமர் பதவியை இழந்தவர். முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படத்தை திறந்துவைத்து வரலாறு படைத்தவரும் இவரே. அவருக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x