

பழநி: விலை வீழ்ச்சி காரணமாக, பழநி பகுதியில் தர்பூசணியை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர். பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, பழநி, நெய்க்காரப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தர்பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு தர்பூசணி சீசன் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. விளைச்சலும் அதிகமாக உள்ளது. வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேநேரம், வெளியூர்களில் இருந்தும் பழநி பகுதிகளுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தர்பூசணி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
விவசாயிகளிடம் 1 கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விலை நிர்ணயம் செய்து, வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். அவற்றை, வெளிமார்க்கெட்டுகளில் 1 கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை வியாபாரிகள் விற்கின்றனர். ஆனால், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்வதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். இதனால், சிலர் தர்பூசணியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர்.
இதுகுறித்து பழநி விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு போதிய விளைச்சல் கிடைத்துள்ளது. கோடை காலத்தில் தர்பூசணிக்கு கிராக்கி இருக்கும். ஆனால், வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.3-க்கு விற்றால், பயிரிட்ட செலவு, பராமரிப்பு செலவு கூட கிடைக்காது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர், என்றனர்.