இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் நல்வாழ்த்துகள்: கருணாநிதி

இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் நல்வாழ்த்துகள்: கருணாநிதி
Updated on
1 min read

திருவாரூரில் இஸ்லாமிய மக்களோடு கலந்து பழகிய பாச உணர்வோடு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இஸ்லாமிய மக்களின் புனித நூலான "திருக்குர்ஆன்" நூல் அருளப்பட்ட ரமலான் மாதம் முழுதும் உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல், பசித் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அன்றாடம் உரிய பணிகளை ஆற்றி, நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மனநிறைவோடு இரமலான் திருநாளைக் கொண்டாடும் எனதருமை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இஸ்லாம் நெறி வளர்த்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார்.

"தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள்; அவ்வாறே உறவினர்களிடமும் அண்டை வீடுகளில் உள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்பொழுதும் உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளர்களிடமும் அன்பு செலுத்துங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள், பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள்; நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள்; பிறர்மீது பொறமை கொள்ளாதீர்கள்; பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள், உங்கள் வாக்குறுதியைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறாதீர்கள்" என்பன போன்ற நற்பண்புகட்கும், நேர்மைக்கும், நெஞ்சுறுதிக்கும் வழிகாட்டும் அறிவுரைகளையே போதனைகளாக வழங்கினார் நபிகள் நாயகம்.

அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு, திருவாரூர் வீதிகளில் ஒரு கையில் ‘குடியரசு’ ஏட்டையும், மறு கையில் ‘தாருல் இஸ்லாம்’ ஏட்டையும் ஏந்திய வண்ணம் இஸ்லாமிய மக்களோடு நான் கலந்து பழகிய அந்தச் சிறுவயதுமுதல் கொண்டுள்ள பாச உணர்வோடு எனது ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in