

மதுரை: திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் குருராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'திமுகவில் 1990 முதல் உறுப்பினராக இருந்து வருகிறேன். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர்கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பேருந்து நிறுத்தம் இருப்பதால் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இதனால் நூறு அடி உயர கொடிக் கம்பத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மேலும், கொடிக் கம்பத்தை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். நான் திமுக உறுப்பினராக இருந்தாலும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடிக் கம்பம் அமைப்பதில் உடன்பாடு இல்லை. எனவே, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓஎப்டி ஆர்ச் அருகே 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாளில் அகற்ற வேண்டும், அது தொடர்பாக ஜூன் 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.