

சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மத்திய உள்துறை அமைச்சருக்கு கடந்த வாரம் நான் விடுத்திருந்த கோரிக்கை மற்றும் பல்வேறு மாநிலங்களின் தொடர் வலியுறுத்தலின் அடிப்படையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் நடத்தப்படும், எஸ்எஸ்சி, எம்டிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை 13 மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளமைக்காக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, அனைத்து மத்திய அரசுத் தேர்வுகளும் மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாமக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சாதகமான உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் மொழியில் போட்டித் தேர்வு என்ற கனவு நனவானதில், மிக்க மகிழ்ச்சி.