மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு - பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் வக்கீல் நோட்டீஸ்

மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு - பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் வக்கீல் நோட்டீஸ்
Updated on
2 min read

சென்னை: தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் பகிரங்க, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார். அப்போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2,039 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் அண்ணாமலைக்கு நேற்று அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அப்பட்டமான, அபாண்டமான, ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை பாஜக தலைவர் அண்ணாமலை பொது வெளியில் சுமத்தியுள்ளார். எம்எல்ஏ மற்றும் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், நற்பெயரும் உள்ளது. இந்த நிலையில், ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற வீடியோவில் எந்த காரணமும் இல்லாமல், அரசியல் ஆதாயத்துக்காக உதயநிதி ஸ்டாலினின் மகன் மற்றும் மைனர் மகளின் பெயரையும் சேர்த்து வெளியிட்டிருப்பது குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டத்துக்கு புறம்பானது. அவர்கள் திமுகவில் உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ கிடையாது. பொது வாழ்விலும் இல்லை. அவர்களது பெயரையும் சேர்த்து வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது.

ரெட் ஜெயன்ட் மூவீஸின் பங்குதாரராக இருந்த உதயநிதி ஸ்டாலின், பொதுவாழ்வுக்கு வந்ததும், அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவர் பங்குதாரராக இருந்தபோது ரெட் ஜெயன்ட் மூவீஸின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி மட்டுமே. ஆனால், ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கு மட்டுமே ரூ.2,010 கோடி சொத்துகள் இருப்பதாகவும், வேட்புமனுவில் உதயநிதி தெரிவித்தபடி ரூ.29 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ஆக மொத்தம் ரூ.2,039 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானது.

2021 சட்டப்பேரவை தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில், உதயநிதி ஸ்டாலின் தனது சொத்து விவரங்கள், வாங்கிய கடன்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது பொது தளத்தில் உள்ளது. முறையாக வருமான வரித் துறையில் ஆண்டுதோறும் கணக்கு விவரங்களை சமர்ப்பித்து வருகிறார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2,039 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும், நோபிள் ஸ்டீல்ஸ் என்ற துபாய் நிறுவனத்தில் அங்கம் வகிப்பதாகவும் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது மட்டுமின்றி, பொதுவாழ்வில் உள்ள உதயநிதியின் புகழ், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடியது, அவதூறானது.

எனவே, அண்ணாமலை இதற்காக 48 மணி நேரத்தில் பகிரங்க, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அவர் வழங்க வேண்டும். தவறினால் அண்ணாமலை மீது சிவில், கிரிமினல் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in