

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கலை,பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும், வளர்க்கவும் 200 அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைப் பயிற்சிகள் ரூ.1.7 கோடியில் நடத்தப்படும்.
சென்னை, திருவையாறு அரசு இசைக் கல்லூரிகளில் தவில், நாதசுரம் பிரிவுகளில் ரூ.18லட்சத்தில் பட்டப் படிப்பு தொடங்கப்படும். சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் ரூ.20.92 கோடியில் கட்டப்படும்.
இதுதவிர, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கைவரலாறு மற்றும் கலைப் படைப்புகள் ரூ.20 லட்சத்தில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாக்கப்படும். அதேபோல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலமாக கலாச்சார பரிமாற்றத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் நல்கைத் தொகையை உயர்த்தவும், அலுவலகத்துக்கான தளவாடங்கள் கொள்முதல் செய்யவும் ரூ.1.09 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை அரசு அருட்காட்சியகத்தின் கட்டிடங்கள் ரூ.10 கோடியில் பழுது பார்த்து, சீரமைக்கப்படும். அனைத்து அருட்காட்சியகங்களிலும் உள்ள சேகரிப்புகளை பட்டியலிடுவதற்கு ‘அருட்காட்சியக தகவல் அமைப்பு’ எனும் பிரத்யேக மென்பொருள் ரூ.1.5 கோடியில் உருவாக்கப்படும்.
தமிழகத்தின் தொன்மையான பண்பாட்டு மரபுகளை காலவரிசைப்படி அறிந்து கொள்வதற்கு தொல்லியல் மற்றும் வரலாற்று நிலவரை படத்தொகுதி (அட்லாஸ்) தயாரிக்கும் பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்படும் என்பன உட்பட 17 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.