Published : 20 Apr 2023 04:05 AM
Last Updated : 20 Apr 2023 04:05 AM
பொள்ளாச்சி: பஞ்சமி நிலம் மீட்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் அருணபதி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ கொலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தாய் மற்றும் மகனை உறங்கும்போதே கொல்லக் கூடிய அளவுக்கு சாதி மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. இந்த சம்பவத்தில் அனுசுயா என்னும் தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆணவ கொலையை கண்டித்தும், ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் 22-ம் தேதி கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பஞ்சமி நிலம் மீட்பு குறித்து வானதி சீனிவாசன் கோரிக்கை எழுப்பி இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர்களுக்கான பிரிவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறுவது அபத்தமாக இருக்கிறது.
ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். காவிரி நீர் உரிமைக்காக விக்னேஷ் என்னும் பள்ளி மாணவன் தீக்குளித்து உயிரிழந்தார். அந்த மாணவர் இறந்த நாளை காவிரி எழுச்சி நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT