

நாமக்கல்: காமாட்சி நகர் கிராமத்தில் கடந்த இரு மாதங்களாக காவிரி குடிநீர் விநியோகிக்கப்படாததால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மோகனூர் அருகே ஓலப்பாளை யம் ஊராட்சி காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த இரு மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர விநியோகிக்கப் படவில்லை. ஆழ்துளைக் கிணறு நீரும் சரியாக வருவதில்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம், என்றனர்.