

சென்னை: சென்னை பாரிமுனை அருகேஅரண்மனைக்காரன் தெருவில் தனி நபருக்குச் சொந்தமான பழைய 5 மாடிக் கட்டிடம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி, தீயணைப்புத் துறை, காவல் துறை, தேசியபேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அரண்மனைக்காரன் தெருவில் 60 ஆண்டுகளுக்கு முன்புகட்டப்பட்ட 5 அடுக்கு மாடிக் கட்டிடத்தை பரத் என்பவர் அண்மையில் வாங்கியுள்ளார். இந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று காலை 10.47 மணி அளவில்அந்த கட்டிடம் திடீரென இடிந்துதரைமட்டமானது. அப்போதுஅந்த வீட்டிலிருந்து வெளியேவந்த தொழிலாளி ஒருவர்காயத்துடன் மீட்கப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, காவல் துறை, தேசிய பேரிடர்மீட்புப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். மீட்புப் பணிகளின்போது ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. பேரிடர் மீட்புப் படையினர், வெப்ப உணரி கருவிகள், மோப்ப நாய் போன்றவை உதவியுடன், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என ஆய்வு செய்துவருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி வரை யாரும் சிக்கி இருப்பதாகக் கண்டறியப்படவில்லை. யாரும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர்மு.மகேஷ்குமார், மாநகராட்சிஆணையர் ககன்தீப் சிங் பேடிஉள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, ``இடிபாடுகளை அகற்றும் பணி இன்றே நிறைவடையும். இப்பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 284 பேர்ஈடுபட்டுள்ளனர். கட்டிட உரிமையாளர், கட்டிட சீரமைப்புபணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதற்காக மாநகராட்சி அனுமதி பெறவில்லை.இது தொடர்பாக உரிமையாளரிடம் விளக்கம் கோரப்படும். இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, ``துறைமுகம் தொகுதியில் பழமையான கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அகற்ற உரிமையாளர்கள் முன்வருவதில்லை. சட்ட விதிகளின்படி இடிக்க நோட்டீஸ்அனுப்பினால், அதில் விலைஉயர்ந்த பொருட்கள், மர வேலைப்பாடுகள் உள்ளன எனக்கூறி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே சட்டத்துக்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவதில்லை. முடிந்தவரை கட்டிடங்களை இடித்து அகற்ற முழு முயற்சியுடன் மாநகராட்சி பணியாற்றிக்கொண்டு இருக்கிறது" என்றார். இச்சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.