Last Updated : 01 Sep, 2017 09:49 AM

 

Published : 01 Sep 2017 09:49 AM
Last Updated : 01 Sep 2017 09:49 AM

போக்குவரத்துக்கழக ஊதிய ஒப்பந்த விவகாரம்: உயர் நீதிமன்ற கெடுவால் நாளை பேச்சுவார்த்தை - தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து சென்னையில் நாளை (செப். 2) ஊதிய ஒப்பந்தக்குழு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஓய்வூதிய பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரியும் கடந்த மே 14-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இது சட்டவிரோதம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது. இதையடுத்து 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு பிறகு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் மாயாண்டி(82) என்பவர், போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதம் என அறிவித்த நீதிபதிகளில் ஒருவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு ஒன்றினை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, 3 மாதங்களில் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், “3 மாதத்தில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளித்து விட்டு, இப்போது மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பதாக கூறுகிறீர்களே? போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான இறுதியான முடிவுடன் நிதித்துறை செயலர், போக்குவரத்து செயலர் ஆகியோர் செப். 4-ல் நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மீண்டும் பேச்சுவார்த்தை

உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை செப். 2-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், அதில் பங்கேற்க வருமாறும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப். 2-ல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செப். 4-ல் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சம்பத் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில் விடுப்பு சம்பளம், திருமணக்கடன் தொகை உட்பட பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன. இதுநாள் வரை அரசுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோல் அதிகாரிகள் நடந்து கொண்டனர். போக்குவரத்து ஊழியர் பிரச்சினையில் அரசு தலையிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதை மதித்து அரசும், அதிகாரிகளும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x