இட ஒதுக்கீடு தீர்மானம் முதல் சீனாவை முந்தும் இந்தியா வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.19, 2023

இட ஒதுக்கீடு தீர்மானம் முதல் சீனாவை முந்தும் இந்தியா வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.19, 2023
Updated on
3 min read

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் புதன்கிழமை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின், “மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக நீதியை மறுப்பது சரியாகாது. சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்ததற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.

“அரசியல் நோக்கத்துக்காகவே இந்தத் தீர்மானம்”- வானதி: மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். முன்னதாக, சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது வானதி சீனிவாசன் பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,"கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகிறது என்பதை இந்தத் தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்பதை நாங்கள் முதல்வரிடம் கேள்வியாக எழுப்பினோம்.

அதுமட்டுமல்லாமல் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கின்ற திமுக அரசு வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக பாஜக கருதுகிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.

ஐகோர்ட் உத்தரவு, அரசு உறுதி - நொச்சிக்குப்பம் போராட்டம் வாபஸ்: சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சூழலில், சட்டப்பேரவையில் புதன்கிழமை எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், "நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்று காலையொடு முடிவுக்கு வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, "நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக, நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியானது ஆறு மாதத்தில் முடிவடையும்" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நொச்சிக்குப்பம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

களத்தில் இளைஞர்கள் - மாற்றங்களை நோக்கி தாய்லாந்து!: தாய்லாந்தில் மன்னர் ஆட்சிமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் பல அண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தனது காதலிகளுடன் வலம் வந்தது உள்ளிட்ட பல சர்ச்சைகள், இவர் மீது உள்ளது.

இதையடுத்து, 2020-ல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சோந்திச்சா ஜாங்க்ரூ என்பவரும், டோடோ என்பவரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நாங்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதற்கு காரணம், வெறும் போராட்டங்கள் மட்டும் போதாது; மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக வழங்குவதற்கு மக்களிடமிருந்து எங்களுக்கு உதவி தேவை” என்று தெரிவித்துள்ளனர்.

மன்னாராட்சிக்கு எதிராக போராடி தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு, மக்களிடம் அதிகரித்து இருப்பதாக ஊடகங்களும் கணித்து செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில் டி.அன்பரசன் போட்டி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“நாகரிகம் தவறி பேசாதீர்கள்...”- திருமாவளவன்: சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் ஒருவர், ஒரு சின்ன கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து, நீண்ட நாட்களாக விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறது என்றார். அதற்கு பதிலளித்த அவர், “சின்ன கிராமம், பெரிய கிராமம் என்பதல்ல பிரச்சினை. அரசு எதிராக இல்லை. அரசுக்கு தலித் மக்களுக்கு எதிராக செயல்படவேண்டிய தேவை இல்லை. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கட்டும். அதில் என்ன அவசரம், காலக்கெடு ஏதாவது இருக்கிறதா? புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கும் தேக்கத்திற்கான காரணம் இதுவரை நமக்கு தெரியவில்லை" என்றார்.

அப்போது அதே செய்தியாளர், நீங்களும் தற்போது திமுககாரர் போல பேசுகிறீர்களே? என்றார். அதற்கு, "இந்த மாதிரி பேசுகிற வேலை வைத்துக்கொள்ள வேண்டாம். இதுபோல பேசுவதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் நாகரிகம் இல்லாத பேச்சு. உங்களுக்கும் ஒரு நாகரிகம் வேண்டும். நாகரிகம் தவறி பேசாதீர்கள்" என்று பதிலளித்தார்.

தன்பாலின திருமண வழக்கு குறித்து மாநிலங்களுக்கு கடிதம்: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை இதனை தெரிவித்தார். அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறப்பானது என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கார்த்தூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய சமூகத்தின் நிலை குறித்த வழக்கமான அறிக்கைகளைப் பெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா: உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ''மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கனத்த இதயத்துடன் முடிவு செய்வோம்”: போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் ஐ.நா. குழு, தலிபான்களின் கெடுபிடி காரணமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தலிபான்கள் ஒத்துழைப்பு கிட்டாவிட்டால் ஆப்கனிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in