உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் பின்தங்கியதா? - அமைச்சருடன் அதிமுக வாக்குவாதம்

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் பின்தங்கியதா? - அமைச்சருடன் அதிமுக வாக்குவாதம்
Updated on
1 min read

சென்னை: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அதன் விவரம்:

அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர்: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக நாட்டிலேயே முதல் இடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தெலங்கானா, மகாராஷ்டிரா நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கரோனா பேரிடரின்போது, கடந்த ஆண்டில் தெலங்கானாவும், முந்தைய ஆண்டில் மகாராஷ்டிராவும் முன்னிலைக்கு வந்தன. ஆனாலும், உறுப்பு தானம் பெறுவதில் தொடர்ந்து தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதிமுக ஆட்சியில் 13 அரசு மருத்துவமனைகளுக்குதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 23 அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 158 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன்மூலம் 553 உறுப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இது மிகப்பெரிய சாதனை. இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் என்ற நிலை வர உள்ளது.

காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை

சி.விஜயபாஸ்கர்: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், அதிமுக ஆட்சியின்போது, அரசு மருத்துவமனைகளில் முதலில் சிகிச்சை, பின்னர் அப்ரூவல் என்ற நிலை இருந்தது. தற்போது முதலில் அப்ரூவல், பின்னர் சிகிச்சை என்கிற நிலை உள்ளது.

மா.சுப்பிரமணியன்: அதிமுக ஆட்சியில் முதல்வர் காப்பீட்டுக்கு பிரீமியம் ரூ.699. இப்போது ரூ.849. அதேபோல, மருத்துவமனைகள் எண்ணிக்கை 970-ல் இருந்து 1,760 ஆகவும், சிகிச்சை முறைகள் 1,027-ல் இருந்து 1,513 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், வருமான வரம்பு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள் ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.

சி.விஜயபாஸ்கர்: மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த பிறகுதான் ரூ.2 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்ந்தது. நாங்கள் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை கொடுத்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in