

சென்னை: ஆதிதிராவிடர் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், பட்டியல் சமூக மாணவர்களை திமுக அரசு பிரித்துப்பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவு: ராணிப்பேட்டை கீழ வீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிகடந்த 2021-ம் ஆண்டு முதல்,சொந்த கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகை கட்டிடத்தில் இயங்கிவருவதாக நாளிதழில் வந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சிஅடைந்தேன். 2 ஆண்டுகளுக்குமுன்பு, இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டரூ.40 லட்சம் நிதி ஒதுக்குவதாக அறிவிப்பு மட்டும் வெளியிட்டு,நிதி ஒதுக்காமல் மாணவர்கள், பெற்றோரை திமுக அரசு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
அதே கீழ வீதி பகுதியில் இருக்கும் மற்றொரு அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும்போது, ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிக்கு அடிப்படை வசதிகள்கூட செய்யாமல் திமுக அரசு போலியாக சமூக நீதி பேசி வருகிறது.
மாணவர்கள், பெற்றோர் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல், ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் வழங்காமல், ‘வேண்டுமென்றே பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக’ என்றே கருதவேண்டி உள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.