Published : 19 Apr 2023 04:13 AM
Last Updated : 19 Apr 2023 04:13 AM
தருமபுரி: ஒகேனக்கல்லில் நேற்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 320 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பகுதியில் மீன் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. மீன் சந்தையில் சமைக்கப்படாத மீன்களும், உணவகங்களில் சமைக்கப்பட்ட மீன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, உணவுப் பாதுகாப்புத் துறை விதிகளின்படி உரிய தரத்தில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு தரத்தை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா வழிகாட்டுதல்படி பென்னாகரம் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, மீன் வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் நேற்று ஒகேனக்கல் பகுதியில் மீன் கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில், 5 கடைகளில் அழுகிய மீன்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு 320 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மீன்களை பள்ளத்தில் கொட்டி பிளீச்சிங் பவுடர் தெளித்து அழிக்கப்பட்டது. அழுகிய மீன்களை இருப்பு வைத்திருந்த கடை உரிமையாளர்கள் 5 பேருக்கு தலா ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஒகேனக்கல் பகுதியில் உள்ள கடைகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. அதிகாரிகள் கூறும்போது, ‘ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தரமற்ற மீன்களை விற்பனை செய்வோர் மீதான நடவடிக்கையும் தொடரும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT