Published : 19 Apr 2023 06:22 AM
Last Updated : 19 Apr 2023 06:22 AM

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்: ஒப்பந்த முறை நியமனத்தை கண்டித்து வேலைநிறுத்த நோட்டீஸ்

போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநரிடம் வேலை நிறுத்த நோட்டீஸை சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று வழங்கினர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பேருந்துஓட்டுநர்களை நியமிப்பதற்கு கடும்எதிர்ப்பு எழுந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நேற்று சிஐடியுதொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 8 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 22 மண்டல அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் சங்கங்களின் நிர்வாகிகள், வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர். இத்துடன் தொழிலாளர் துறைக்கும், காவல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் நேற்று கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள், விரைவுபோக்குவரத்துக் கழக மேலாண்இயக்குநரும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பொறுப்பு மேலாண் இயக்குநருமான கே.இளங்கோவனை நேரில் சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:

மாநகரம், விரைவு, கும்பகோணம் ஆகிய 3 போக்குவரத்துக் கழகங்களிலும் நிரந்தர காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது. இக்கோரிக்கைகளின் மீது அரசும், கழக நிர்வாகங்களும் உரிய தீர்வுகாணாவிட்டால் மே 3 அல்லது அதற்குப் பின்பு 6 வார காலத்துக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தயானந்தம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2013-ம் ஆண்டுமுதல் பணியாளர் நியமனம் செய்யப்படவில்லை. நிரந்தரப் பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது சட்ட விரோதம். ஊதிய ஒப்பந்தம்,போக்குவரத்துக் கழக நிலையாணை என அனைத்து விதிகளுக்கும் புறம்பானது. இந்த முடிவைக்கைவிட வலியுறுத்தி வழங்கப்பட்டுள்ள வேலைநிறுத்த நோட்டீஸை அரசு அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒப்பந்த முறையில் வேலை என்பது சமூக நீதிக்கும் எதிரானது.

போக்குவரத்துக் கழகங்கள் அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க முடியும். எனவே, அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x