

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கவுஞ்சியில் சுற்றுலாத் துறையின் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலாத் துறை மூலம் சுற்றுலாவை மேம்படுத்தவும், இங்கு வரும் பயணிகளை கவரவும் மேல்மலை கிராமமான மன்னவனூரை அடுத்துள்ள கவுஞ்சியில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது பல்வேறு சாகச விளையாட்டுகள், பொழுது போக்கு அம்சங்களுடன் மொத்தம் 5 ஏக்கரில் சுற்றுலாத் தலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்துக்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கு காரணம் மேல்மலை கிராமமான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமையான புல்வெளிகள் உள்ளன. இங்கு விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு இந்த புல்வெளிகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன. தற்போது புல்வெளிகள் நிறைந்த பகுதியில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளதால் புல்வெளிகள் அழியும் நிலையில் உள்ளது.
இதனால் போதிய தீவனம் கிடைக்காமல் கால்நடைகளை விற்கும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவுஞ்சியில் புல்வெளிகள் நிரம்பிய பகுதியில் சாகச சுற்றுலாத் தல கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக புல்வெளிகள் அழிக்கப்பட்டால் இயற்கை வளம் பாதிப்பதோடு, கால்நடை தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கவுஞ்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் ரூ.8 கோடியில் மீன் விதைப் பண்ணை அமைக்க திட்டமிட்டனர். அத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த திட்டத்துக்கு நீதிமன்றமும் தடை விதித்தது.
தற்போது சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் மேல்மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வணிக நோக்கில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவை மீறி சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை ரத்து செய்து, புல்வெளிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.