Published : 10 Sep 2017 11:01 AM
Last Updated : 10 Sep 2017 11:01 AM

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு அறிவிப்பு; நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், நீட்தேர்வு ரத்து உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. 11-ம் தேதி (நாளை ) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் கூறியதாவது:

எங்கள் 3 கோரிக்கைகளோடு, மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற 4-வது கோரிக்கையையும் சேர்த்து 11-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அன்றைய தினம் ஆர்ப்பாட்டமும், 12-ம் தேதி மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 13-ம் தேதிமுதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

28 ஆசிரியர் சங்கங்கள், 68 அரசு ஊழியர் சங்கங்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலக சங்கம் ஆகியவை இதில் பங்கேற்கின்றன. இப்போராட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இது அவசரமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல. 13 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கும் தமிழக அரசுதான் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மற்றொரு பிரிவு மறுப்பு

இதற்கிடையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மற்றொரு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியதாவது:

அமைச்சர்களுடனான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நவம்பர் இறுதிக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும், 7-வது ஊதியக்குழு தொடர்பாக செப்டம்பர் இறுதியிலும் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஈரோட்டில் கடந்த 6-ம் தேதி சந்தித்தபோதும் இதைத் தெரிவித்தார். இதை உள்வாங்கிக்கொள்ளாத சில அமைப்புகள், தனியாகப் பிரிந்துசென்று போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்துவது என்ற முடிவில் மாற்றம் இல்லை. தள்ளிவைத்திருக்கிறோமே தவிர, கைவிடப்படவில்லை.

எனவே, செப்டம்பர் 11 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், உண்மையான ஜாக்டோ - ஜியோவுக்கு பொருந்தாது. இதில் தலைமைச் செயலக சங்கம் பங்கேற்காது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 12-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x