Published : 19 Apr 2023 06:26 AM
Last Updated : 19 Apr 2023 06:26 AM
திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் எரி கற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடி சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலின்பேரில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். முற்றிலும் எரிந்து சேதமடைந்த தொழிற்சாலை குறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தீ விபத்தில் உருக்குலைந்த ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணி ராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், வானில் இருந்து நெருப்பு பிழம்பாக வந்த எரி கற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர். மேலும், அந்த கம்பெனியில் இருந்து எரி கற்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர். இவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் சிலர் கூறும்போது, ‘‘வானில் இருந்து எரிகல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்ததை சுற்று வட்டாரப் பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.
அவர்களின் நேரடி சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். சுமார் 3 கி.மீ சுற்று வட்டாரத்தில் எரி கற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம்.
முதற்கட்ட ஆய்வில் அவை எரி கல் என்று உறுதியானாலும், அவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, சேகரிக்கப்பட்ட எரி கற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு நீதிமன்ற அனுமதியுடன் அனுப்பவுள்ளோம்.
நாட்றாம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன. தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின. ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. தற்போது நடைபெற்றுள்ளது மூன்றாவது நிகழ்வாகும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT