

சென்னை: ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.18) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.18) தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2021 - 22ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கண் சிசிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட நடமாடும் கண் மருத்துவப்பிரிவு சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தமிழக நல்வாழ்வுக் குழும நிதியுதவியுடன் ரூ.1.50 கோடி செலவில் நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை 5 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த குளிரூட்டப்பட்ட வாகனம், கணினி கண் பரிசோதனை கருவி, சர்க்கரை நோய் விழித்திரை நிழற்பட கருவி ஆகியவைகளைக் கொண்டிக்கும். கண் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களுடன் தினமும் ஒரு கிராமத்திற்கு இந்த வாகனத்துடன் செல்லும் கண்மருத்துவ உதவியாளர், அங்குள்ள முதியவர்களை பரிசோதனை செய்து, கண்புரை அறுவை சிகிச்சைத் தேவைப்படுபவர்களை சிகிச்சைக்காக இந்த வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.