

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலி பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு மூலம் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 2 மடங்காக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் சமூக நலம், மகளிர் உரிமை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் கவனிக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் சார்பில் சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அவர் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகை செலுத்த வட்டியில்லா வங்கி கடன் வழங்கப்படும். 1,000 பேர் பயன்பெறும் வகையில் ரூ.1.20 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். உயர்கல்வி பயிலும் 1,000 பார்வை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14 ஆயிரம் செலவில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படும். இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், ஒருகால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதியுதவி பெறும் ஆரம்பநிலை மையங்கள், மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் ரூ.4,500 தொகுப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து தங்கியுள்ள 592 மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் உணவூட்டு மானியம் ரூ.42-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ரூ.50 லட்சத்தில் ‘மீண்டும் இல்லம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தப்படும்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 2 மடங்காக உயர்த்தப்படும். மனநலம் மற்றும் அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.14 கோடியில் 3 மறுவாழ்வு இல்லங்கள் கட்டப் படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.