Published : 18 Apr 2023 06:00 AM
Last Updated : 18 Apr 2023 06:00 AM
சென்னை: தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் பணியை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சோழிங்கநல்லூர் உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ், ‘‘சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஜல்லடியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆண்டுகளாகியும் பாதாளச் சாக்கடை பணிகள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பெரும்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட 7ஊராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை முதல்கட்ட திட்டப்பணிகளைத் தொடங்க வேண்டும். வீடுகளுக்கான குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் வசூலிப்பதில் கடந்த 2022 வரை விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.
இதற்குப் பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ளகரம் - புழுதிவாக்கம், கொட்டிவாக்கம், பெருங்குடி, மடிப்பாக்கம், ஜல்லடியான் பேட்டை, நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி, செம்மஞ்சேரி உள்ளிட்ட 14 பகுதிகள், சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளாகும். இந்த தொகுதியில் 7.65 லட்சம் மக்கள் தொகையும் 5,337 தெருக்களும் உள்ளன.
இப்பகுதிகள் புதிதாக சென்னையுடன் சேர்க்கப்பட்டவை என்பதால் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பள்ளிக்கரணை பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் ரூ.52.53 கோடியில் கடந்த 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 93.13 கிமீ தூரத்துக்கு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டு, 10 முறைஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டது.
ஆனால் இதில் 90.67 கிமீநீளத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டன. பணிகள் தாமதமானதால் 2019-ல்ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ரூ.39.30 கோடியில் புதிய ஒப்பந்தம் பணி ஆணைவழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நீர்வளத் துறையின் புதிய வடிகால் பணிகளை மேற்கொள்ள, ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றியமைக்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 4 கழிவுநீர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 1, 2, 3-ம் மண்டலங்கள் ஜூன் 30-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீதமுள்ள 4-வது மண்டலத்தில், வேளச்சேரி - தாம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் பணிகள் செப்டம்பரில் முடிக்கப்படும்.
ஐடிசி கட்டணம் குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இல்லந்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தாம்பரம் பல்லாவரம் பகுதிகளுக்கு, புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டத்தை 2 மாதங்களில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அந்த பகுதிகளில் உள்ள மொத்த மக்களுக்கும் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT