Published : 18 Apr 2023 07:15 AM
Last Updated : 18 Apr 2023 07:15 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கி.மீ. தூரத்துக்கு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (என். எச். 205) அமைக்கும் பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 205) திருநின்றவூர் - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ. தூரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இப்பணியில் ஆந்திர மாநிலம், புத்தூர் - ரேணிகுண்டா வரை, நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்தூர் வரை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையானது பல்வேறு இடையூறு காரணமாக ஐ.சி.எம்.ஆர். பகுதியுடன் நின்று விட்டது. இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், திருவள்ளூர் நகரில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த, திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் முதல் திருநின்றவூர் தனியார் இரும்பு தொழிற்சாலை வரை, 17 கி.மீ. தூரத்துக்கு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ. 364.21 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர்குளம், செவ்வாப்பேட்டை பகுதிகளில் புறவழிச் சாலையாக அமைய உள்ளது. மேலும், 14.182 கி.மீ. நீளம் கொண்ட அணுகுசாலையுடன் இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரி பகுதியில், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் பணிகளை விரைந்து நிறைவு செய்ய தொடர்புடைய அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு கலந்துரையாடி, அவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ஜனகுமாரன், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT