Published : 18 Apr 2023 06:06 AM
Last Updated : 18 Apr 2023 06:06 AM

கலாஷேத்ரா வழக்கு | சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவிபேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக்கூடாது என்றும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில், குழுவை மாற்றி யமைக்க வேண்டும் எனவும் கோரி கல்லூரி மாணவிகள் 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை ஆஜராகி, இந்த உள் விசாரணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என வாதிட் டார்.

கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, அங்கு நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார்.

தமிழக அரசு தரப்பில்அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

மாணவிகளுக்கு எதிராக.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா நிர்வாகத்தின் நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்றும் வகையில் சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றமே அமைக்கும். வழக்கு தொடர்ந்துள்ள மற்றும் புகார் அளித்துள்ள மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத் தக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது.

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மாணவிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. மாநில மகளிர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தமிழக அரசுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்.24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x