Published : 16 Sep 2017 07:27 AM
Last Updated : 16 Sep 2017 07:27 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இதற்கிடையே, வரும் 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று முதல் ரயிலில் முன்பதிவு தொடங்கி விட்டனர். குறிப்பாக, ஜனவரி 12-ம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் நேற்று முன்தினமும் ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் நேற்றும் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

பெரும்பாலான மக்கள் இணையதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் டிக்கெட் முன்பதிவு மையங்களில் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது. டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 7 முதல் 10 நிமிடங்களில் நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

அதன்பிறகு பொதிகை, அனந்தபுரி, திருச்செந்தூர், மன்னை விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு முடித்து விட்டது. காத்திருப்போர் பட்டியல் 50 முதல் 257 வரையில் நீடித்து இருந்தது.

இணையதளம் மூலம் 70 % பதிவு

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான மக்களிடம் இணையதளம் வசதி உள்ளது. இதனால், அவர்கள் எளிமையாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். தற்போது, 70 சதவீதம் பேர் இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த சில வாரங்களில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பும் வெளியாகும். பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி டிசம்பரில் முடிவு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x