

தென்காசி: தாம்பரம்- செங்கோட்டை- தாம்பரம் இடையே ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கடந்த 8-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஏப்ரல் 16 (நேற்று முன்தினம்) முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், ஏப்ரல் 17 (நேற்று) முதல் திங்கள்கிழமைதோறும் செங்கோட்டையில் இருந்தும் தாம்பரத்துக்கும் வாராந்திர ரயிலாக ஏப்ரல், மே மாதங்களில் இயக்கப்படுகிறது.
வாரம் மும்முறை ரயில் சேவையாக ஜூன் 1 முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை,அறந்தாங்கி, காரைக்குடி,அருப்புக்கோட்டை, விருதுநகர்,திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ரயில் நிறுத்தங் களுடன் செங்கோட்டையை மறுநாள் காலை 10.50 க்குசென்றடையும். ஜூன் 2 முதல்செங்கோட்டையில் இருந்துதிங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து வாராந்திர ரயிலாக நேற்று பயணத்தை தொடங்கிய இந்த ரயிலுக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார் தலைமையில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பயணிகள் வரவேற்பு அளித்தனர். இதேபோல் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ஞானதிரவியம் எம்.பி. தலைமையில் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.