மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் முதல் பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.17, 2023

மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் முதல் பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.17, 2023
Updated on
3 min read

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் புதிய அறிவிப்புகள்: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு "மீண்டும் இல்லம்" எனும் புதிய திட்டத்தினை முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் வீதம் பத்து இல்லங்கள் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உளுந்தூர்பேட்டையில் காலணிகள் உற்பத்தி ஆலை: ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட் - உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய உற்பத்தி திட்டம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

‘கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கக்கூடாது’: கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

“சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்” - அண்ணாமலை சவால்: ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், திமுகவிடம் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா திங்கள்கிழமை 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 5 பேர் ஆஜராகி அவரிடம் சாட்சியம் அளித்தனர்.

காங்கிரஸில் இணைந்த கர்நாடகா முன்னாள் முதல்வர்: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முக்கியத் தலைவராக இருந்தவரும், லிங்காயத் சமூகத்தின் வலுவான அடையாளமானவருமான ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவிலிருந்து விலகிய மறுநாளே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர், "நேற்று பாஜகவில் இருந்து விலகினேன். இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். நான் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்தும் இம்முறை எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதோடு, ஒருவரும் என்னை சமாதானப்படுத்தவில்லை; வேறு பொறுப்பு அளிப்பது குறித்து வாக்குறுதியும் அளிக்கவில்லை.வேறு வாய்ப்பு இல்லாத நிலையில், முழு மனதோடு நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்: மத்திய அரசு கருத்து: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ''தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. இத்தகையத் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

4 ராணுவ வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வீரரின் பெயர் தேசாய் மோகன் என்றும், அவர் தனக்கு நேர்ந்த தனிப்பட்ட துன்புறுத்தல் காரணமாக, சக வீரர்கள் நான்கு பேரைச் சுட்டுக்கொன்றதாக கூறியதாகவும், பதிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவு மேம்பட்டு வருகிறது: ரஷ்யா: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்பூ ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியான பயணம் மேற்கொண்டிருக்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முடிவில் புதின் பேசும்போது, “பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சமூகம் சார்ந்து சீனா - ரஷ்ய நாடுகளிடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. முழு உலகத்தின் நலன்களுக்கான பணிகளை இரு நாடுகளும் தொடரும்” என்று தெரிவித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in