

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய சட்ட விதிகளின் கீழ் போலி பத்திரப் பதிவுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் விசாரணையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 9 சொத்துப் பத்திரங்கள் போலியானவை என அறிவித்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட பதிவாளரிடம் நடேசன் என்பவர் புகார் அளித்தார். இதை விசாரித்த மாவட்ட பதிவாளர், அந்த பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து முடிவு செய்ய தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஹரிநாத் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹரிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த சொத்து தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதனால், மாவட்ட பதிவாளர் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மோசடி ஆவணங்கள் மற்றும் போலி பத்திரப்பதிவு குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது. மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு மனுதாரர் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை பெற்று மாவட்ட பதிவாளர் 12 வாரங்களில் சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஹரிநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்து. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.ரவிக்குமார் ஆஜராகி, "போலி பத்திரங்களை ரத்து செய்ய கோரி பத்திரப்பதிவுச் சட்டப்பிரிவுகள் 22 ஏ, 22 பி, 77-ஏ ஆகியவற்றின் கீழ் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், பிரிவு 22-ஏவை கடந்த 2012ம் ஆண்டு பத்திரப்பதிவுச் சட்டத்தில் இணைக்கப்பட்டு, 2016ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிதான் அமலுக்கு வந்தது.
அதேபோல, பிரிவு 22-பி மற்றும் 77-ஏ, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதிதான் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்பிரிவுகள் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட வில்லை. எனவே, 2000-ம் முதல் 2012-ம் ஆண்டு நடந்த பத்திரப்பதிவு குறித்து மாவட்ட பதிவாளரால் விசாரிக்க முடியாது. மேலும் சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எந்த ஒரு புகாரையும் மாவட்ட பதிவாளரால் விசாரிக்க முடியாது" என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தமிழக அரசு 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவினால், செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் விசாரணைக்கு தடை ஏற்பட்டுளளது.