

சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்" என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்:
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, தங்கியுள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் உணவூட்டு மானியத்தினை ரூ.42லிருந்து, ரூ.100-ஆக உயர்த்தி ஆண்டுக்கு ரூ.1.24 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு "மீண்டும் இல்லம் (Home Again)" எனும் புதிய திட்டத்தினை முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் வீதம் பத்து இல்லங்கள் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.