

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனு அளித்தனர். மனு கொடுக்க வரும் பொதுமக்களின் உடமைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது, இளம்பெண் ஒருவர் போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் திடீரென ஓடிவந்தார். அவர், கையில் பெட்ரோல் கேன் இருந்ததைப் பார்த்த போலீஸார், ஓடி வந்து இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் கையிலிருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர், சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை் சேர்ந்த பாண்டீஸ்வரி (21) என்பது தெரியவந்தது. போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த பாண்டீஸ்வரியும் கூலித் தொழிலாளி லோகநாதன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சீதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், லோகநாதனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அதனால் குழந்தையை எடுத்துச் சென்று விட்டதும் தெரியவந்தது. அதோடு, பாண்டீஸ்வரியுடன் லோகநாதன் வாழ மறுத்து வருவதும் தெரியவந்தது. இது குறித்து, சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டீஸ்வரி கடந்த சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார். போலீஸார் விசாரணைக்கு லோகநாதன் வரமறுத்துள்ளார். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மனம் வெறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து பாண்டீஸ்வரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அதையடுத்து, சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டீஸ்வரி கொடுத்த புகாரை விரைந்து விசாரிக்க போலீஸார் அறுவுறுத்தினர். மேலும், மனு மீதான விசாரணைக்காக சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பாண்டீஸ்வரியும் அனுப்பிவைக்கப்பட்டார்.