அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

விஜயகாந்த் | கோப்புப் படம்
விஜயகாந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்கச் செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து வீடுகளில் இருக்கும் மாணவர்கள், கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

மனதை உளுக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்க செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பான செய்திகளை காணும்போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணமும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in