

ஈரோடு: சுகாதாரத்துறையின் ஆஷா பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என ஈரோட்டில் நடந்த மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
ஏஐடியுசி தேசியத் துணைத் தலைவரும், திருப்பூர் எம்பியுமான கே.சுப்பராயன், தேசியச் செயலாளர் வகிதா நிஜாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் துளசி மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 2,650 ஆஷா பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை கிராமப் புற மக்களிடையே அமல்படுத்தும் இந்த ஊழியர்களுக்கு ரூ.5,000-க்கும் குறைவான ஊக்கத் தொகையே மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும். மேலும், கரோனா கால சிறப்பு நிதி ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 45 வயதுக்குள் இருக்கும் ஆஷா பணியாளர்களை கிராம சுகாதார செவிலியராக பணி நியமனம் செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 17ம் தேதி சென்னையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.