Published : 17 Apr 2023 06:05 AM
Last Updated : 17 Apr 2023 06:05 AM
சென்னை: தனித்துவமிக்க படைப்பாளி மா.அரங்கநாதனின் இலக்கியப் படைப்புகள் திருக்குறள் போல உலகம் அறியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.
முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில், மா.அரங்கநாதன் இலக்கிய விருது (2023) வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் கலந்துகொண்டு இலக்கிய படைப்பாளிகள் க.பஞ்சாங்கம், சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ் கலாச்சாரம், பாரபரியத்தை தூக்கி நிறுத்தும் இலக்கியப் படைப்புகளை வாழ்நாள் முழுவதும் வழங்கியவர் மா.அரங்கநாதன். அவர் தனது 18 வயதிலிருந்து எழுதத் தொடங்கினார். 100 சிறுகதைகள், 2 நாவல்கள், பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் தரத்தை உயர்த்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர் எழுதிய‘பறளியாற்று மாந்தர்’ நாவல் மிகவும் பிரபலமானது. மா.அரங்கநாதனின் மகத்தான படைப்புகள் திருக்குறள் போல உலகம் அறியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுரேஷ்குமார் பெருமிதத்துடன் கூறினார்.
முன்றில் இதழ்களின் முழு தொகுப்பு நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வெளியிட்டுப் பேசுகையில், “தனது வாழ்நாளில் தனக்கானஅடையாளங்களும், பொருட்களும் இருக்கக்கூடாது என்கிற சித்தாந்தத்தை உள்வாங்கி ஒரு சித்தராக வாழ்ந்து மறைந்தவர் மா.அரங்கநாதன். தனக்காக எதையும் தேடாமல் தன்னுடைய படைப்புகளை இந்த மண்ணிலே உலவவிட்டு, அதன் மூலமாக காலங்கடந்து இந்த மண்ணிலே இருப்பேன் என்ற கருத்தை விட்டுச்சென்றவர்" என்று தெரிவித்தார்.
அதையடுத்து விருது பெற்றவர்கள் ஏற்புரை வழங்கினர். முன்னதாக எழுத்தாளர் அகரமுதல்வன் வரவேற்றார். கவிஞர் தேவராஜன் நன்றி கூறினார். ஆவணப் படஇயக்குநர் ரவி சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT