Published : 17 Apr 2023 06:58 AM
Last Updated : 17 Apr 2023 06:58 AM
சென்னை: ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் வட இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் `பவித்திரம் ஆயுர்வேத மருந்து' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 27 மருந்துகளை அறிமுகப்படுத்தும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பவித்திரம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது: மிகக் குறைந்த அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.51,500 கோடியாக இருந்த இந்திய ஆயுர்வேத மருந்துகளின் சந்தை மதிப்பு நிகழாண்டில் ரூ.62,600 கோடியாக உயர்ந்துள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,82,400 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவம், மருந்துகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இங்கு தரமான ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து பேசுகையில், ``270 வகை ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் உரிமம் பெற்றிருக்கும் பவித்திரம் ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் ஓரிரு ஆண்டுகளில் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
பவித்திரம் தலைமை வணிக அதிகாரி சதீஷ்குமார், ஸ்ரீசாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் வனிதா முரளி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT