மதுரையில் திறந்தவெளி ‘பார்’ ஆக மாறிய வைகை ஆறு படித்துறைகள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மதுரையில் திறந்தவெளி ‘பார்’ ஆக மாறிய வைகை ஆறு படித்துறைகள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
Updated on
1 min read

மதுரை: மதுரை வைகை ஆற்றில் உள்ள படித்துறைகள், திறந்தவெளி பார் ஆகவும் குப்பைக் கிடங்காகவும் மாறி வருவதால் அவற்றின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் ஆற்றின் படித் துறைகளில் நீராடுவது, துணி துவைப்பது , கோயில் திருவிழாக் காலங்களில் சக்தி கிரகம், பால் குடம் எடுப்பது என படித் துறையே வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

மதுரை நகருக்குள் 12 கி.மீ. செல்லும் வைகை ஆற்றில் ஆரப்பாளையம், தத்தனேரி, புட்டுத்தோப்பு, செல்லூர் எல்ஐசி பாலம் அருகே பெரிய படித்துறை, திருவாப்புடையார் கோயில், பேச்சியம்மன் கோயில், அனுமார் கோயில், திருமலை ராயர் தெப்பம், ஒபுளா படித்துறை, வெங்கடபதி ஐயங்கார், கள்ளுக்கடை சந்து, அண்ணா நகர், மதிச்சியம் ஆகிய இடங்களில் படித்துறைகள் இருந்தன. இந்த ஒவ்வொரு படித் துறைகளும் கதைகள் சொல்லும் அளவுக்கு அவற்றுக்கு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு.

வரலாற்று பாரம்பரியமிக்க இந்தப் படித்துறைகள் கருங்கற்களால் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணையைக் கட்டி தண்ணீரை தேக்கி வைத்த பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து மழைக்காலத்தில் மட்டும் இருந்தது. காலப்போக்கில் மக்கள் பயன்பாடு குறைந்து பல இடங்களில் படித்துறைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின.

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகைக் கரையில் நான்குவழிச் சாலை அமைத்தபோது பல படித்துறைகள் அகற்றப்பட்டு விட்டன. மக்கள் குளிப்பதற்காக சிமென்ட் படிக்கட்டுகள் அமைத்து சில படித் துறைகளை அமைத்துள்ளனர்.

தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் வராததால் மாநகராட்சி கட்டிய படித் துறைகளை மக்களும் பயன்படுத்துவதில்லை. படித் துறைகள் அருகே திருமண மண்டபங்கள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளன. அதனால், பாக்கு மட்டை தட்டைகள், சாப்பிட்ட இலைக் கழிவுகள், பாலிதீன் குப்பையை படித் துறைகளிலும், ஆற்றிலும் சிலர் கொட்டுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பலர் உபயோகிப்பதால் படித் துறைகளின் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. இயற்கையாக பெருமழை பெய்து படித்துறையை தூய்மையாக்கினால்தான் உண்டு. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களும் படித் துறைகளைக் கண்டுகொள்வதில்லை.

தினமும் இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி வந்து படித் துறைகளில் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட மக்கள் படித்துறை பக்கமே வருவதில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in